அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி

விருத்தாசலத்தில் அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-21 18:45 GMT

விருத்தாசலம், 

தவறுதலாக அனுப்பிய பணம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் (வயது 63). இவர், அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர், விருத்தாசலத்தை சேர்ந்த நெல் வியாபாரியான மோகன் என்பவரிடம் நெல் மூட்டைகள் வாங்கி உள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 420-ஐ கடந்த 07.10.2021 அன்று அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மோகன் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல் தவறுதலாக அதே பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றி அனுப்பியதாக தொிகிறது. இதனை அறிந்த முகமது மைதீன் தனது பணத்தை திருப்பி அனுப்புமாறு முகமது அலியிடம் கேட்டுள்ளார்.

திருப்பி கொடுக்கவில்லை

ஆனால் அவர் பணம் அனுப்புவதில் காலம் தாழ்த்தி வந்ததால், விருத்தாசலத்தில் உள்ள தனது நண்பர் ஷாஜகான் என்பவரிடம் கொடுக்குமாறு முகமது மைதீன், முகமது அலியிடம் கூறியுள்ளார். அதன்படி முகமது அலி, கடந்த 23.12.21 அன்று ஷாஜகானிடம் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீதமுள்ள 79 ஆயிரம் ரூபாயை சில நாட்களுக்கு பிறகு நேரடியாக முகமது மைதீனிடம் கொடுத்துள்ளார். ஷாஜகான் கொடுக்க வேண்டிய 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை முகமது மைதீன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரை ஷாஜகான், தான் கொடுக்க வேண்டிய பணத்தை முகமது மைதீனிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

தந்தை-மகன் மீது வழக்கு

இந்ந நிலையில் முகமது மைதீன் நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் உள்ள ஷாஜகான் வீட்டிற்கு நேரடியாக சென்று பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜகான் மற்றும் அவரது மகன் சல்மான் (23) ஆகியோர் சேர்ந்து பணம் தர மறுத்ததுடன் முகமது மைதீனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது மைதீன் கொடுத்த புகாரின் பேரில் ஷாஜகான், சல்மான் ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்