விபத்தில் 2 பேர் சாவு: நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் 2 பேர் இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.;
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வந்த பழனிவேல், கரும்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஜீப்பில் தியாகதுருகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். தியாகதுருகம் அருகே வி.பாளையம் பகுதியில் சென்றபோது ஜீப்பும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பழனிவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து பழனிவேல் மனைவி வளர்மதி மற்றும் 3 பேர் நஷ்டஈடு கேட்டு கள்ளக்குறிச்சி கோா்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 30-3-2022 அன்று பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினர்களுக்கும் நஷ்டஈடாக தலா ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 662 வழங்க உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் கோா்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கீதாராணி விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 5 ஆயிரத்து 677 வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் வந்த விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை கோா்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனா்.