திருச்சியில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை

திருச்சியில் 2 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.

Update: 2022-05-29 20:19 GMT

திருச்சி:

கத்திரி வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் கடந்த 28-ந் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.

வெப்ப சலனம்

திருச்சியில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளன்று பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் திருச்சியில் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே இருந்தது.

இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின்போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிந்தே காணப்பட்டது. நேற்று முன்தினம் அக்னிநட்சத்திரம் நிறைவடையும் முன்பு 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடிமின்னலுடன் இரவில் பலத்த மழை பெய்தது.

இடி, மின்னலுடன் பலத்த மழை

அக்னிநட்சத்திரம் நிறைவடைந்தாலும் திருச்சியில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் மாநகரின் பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. 5.30 மணி அளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன.

தொடர்ந்து இடி-மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இரவு 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரின் பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குளம்போல் தேங்கிய மழைநீர்

குறிப்பாக மேஜர்சரவணன் சாலையில் அய்யப்பன் கோவில் பகுதி, மத்திய பஸ்நிலையம், மேலப்புதூர் சுரங்கப்பாலம், சத்திரம் பஸ்நிலைய பகுதி, பொன்மலைப்பட்டி, கே.கே.நகர், விமான நிலைய பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதன்காரணமாக வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன. மாலையில் திடீரென மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்தனர். பலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. 2 மணி நேரத்துக்கும் மேல் பெய்த திடீர் மழை காரணமாக திருச்சி மாநகரில் வெப்பம் தணிந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்