மதுவில் விஷம் கலந்து குடித்து 2 நண்பர்கள் தற்கொலை

சிங்கம்புணரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-09-15 18:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து 2 நண்பர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நண்பர்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கருப்பர் கோவில்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் மதியரசன் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வெள்ளை கண்ணு (26). உறவினர்களான இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். இதில் வெள்ளை கண்ணுவுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருந்த நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தார். வெள்ளை கண்ணு மூத்த பெண் குழந்தையை வளர்த்து வந்தார். மதியரசனுக்கு திருமணம் ஆகவில்லை.

வெள்ளை கண்ணுவும், மதியரசனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். மேலும், இருவரும் எந்தவித வேலைக்கும் செல்லாமல் கடந்த சில தினங்களாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை அவர்களுடைய பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளை கண்ணுவின் மாமா வீட்டு மாடியில் வெள்ளை கண்ணு, மதியரசன் இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் வயிற்று வலியால் இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த அவர்களது உறவினர்கள் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளை கண்ணுவும், மதியரசனும் இறந்தனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்