போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது

போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-26 17:58 IST

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் பண்ருட்டி அருகே 1 ஏக்கர் 50 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. பத்மாவதியின் சகோதரர் பச்சையப்பன் போலி ஆவணங்களை தயாரித்து தன்னுடைய பெயருக்கு அந்த இடத்தை பதிவு செய்து கொண்டார்.

இதை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலி ஆவணங்களை ரத்து செய்யும் உத்தரவை பெற்றார்.

அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளரை சந்தித்து கோர்ட்டு உத்தரவை அளித்தார். கோர்ட்டு உத்தரவு காஞ்சீபுரம் அலுவலகத்தில் இருந்து வாலாஜாபாத் துணை பத்திர பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

நீண்ட நாட்கள் ஆகியும் போலி ஆவணங்கள் ரத்து செய்யப்படாததால் உலகநாதன் மீண்டும் காஞ்சீபுரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் நவீன்குமாரை அணுகி கேட்டபொழுது ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அந்த பதிவை ரத்து செய்து தருவதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதன், காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் கொடுப்பதாகவும் பின்னர் மீதி ரூ.1 லட்சம் தருவதாக கூறுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மாலை ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் நோட்டுகளை உலகநாதனிடம் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட நவீன்குமாரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பேரில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற உலகநாதன், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நவீன்குமாரிடம் கொடுக்க சென்றபோது, டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் சந்தோஷ்பாபுவிடம் லஞ்ச பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். உலகநாதன் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டரிடம் கொடுத்தவுடன் பணத்தை எடுத்து சென்று நவீன்குமாரின் மோட்டார் சைக்கிளில் வைத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சந்தோஷ்பாபுவை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரணை செய்தபோது, அலுவலக உதவியாளர் நவீன்குமாரிடம் கொடுப்பதற்காக பணத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில் அலுவலக உதவியாளர் நவீன்குமார் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் சந்தோஷ்பாபு இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்