பாசி நிறுவன இயக்குனர்கள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை
பாசி நிறுவன இயக்குனர்கள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை;
கோவை
தமிழகத்தை உலுக்கிய ரூ.930 கோடி மோசடி வழக்கில் பாசி நிறுவன இயக்குனர்கள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடி அபராதமும் விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
பாசி நிறுவனம்
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு செயல்பட்டது. இதன் நிர்வாக இயக்குனர்களாக திருப்பூரை சேர்ந்த கதிரவன், அவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 45), கமலவள்ளி (43) ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 மாதத்தில் 40 சதவீத வட்டியுடன் சேர்த்து பணத்தை திரும்ப கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இங்கு திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் ஆன்லைன் மூலம் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.
பணம் கொடுக்காமல் மோசடி
ஆனால் இங்கு முதலீடு செய்தவர்களுக்கு 3 மாதம் கழித்து அவர்கள் குறிப்பிட்டபடி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் விசாரணை சரியாக நடத்தவில்லை என்றுக்கூறி முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
அத்துடன் அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்பூரில் முகாமிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
அதில், பாசி நிறுவனத்தை சேர்ந்த கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் 58 ஆயிரத்து 571 பேரிடம் ரூ.930 கோடியே 71 லட்சத்து 29 ஆயிரத்து 883 மோசடி செய்ததும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கூடுதல் வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கு தமிழகத்தையே உலுக்கியது.
பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு
பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சியம், இருதரப்பு வாக்குவாதம் முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய கதிரவன் உயிரிழந்தார். எனவே மற்ற 2 பேரான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் மீது வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மோகன்ராஜ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு கூற தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு தள்ளுபடி
இருதரப்பு மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, இடைக்கால தடையை நீக்கியதுடன், கோவை டான்பிட் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பளிக்கலாம் என்று கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பான உத்தரவு நகலை சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கோவை டான்பிட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கில் கடந்த 22-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இந்த நிலையில் முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க நாங்கள் தயாராக இருப்பதால் தங்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று மோகன்ராஜ் தரப்பில் டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மோகன்ராஜ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
27 ஆண்டு சிறை
இதை தொடர்ந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதால், பாசி நிறுவன இயக்குனர்களான மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரவி வாசித்தார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோருக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கிறேன் என்று நீதிபதி ரவி கூறினார். இந்த பரபரப்பான தீர்ப்பினை அடுத்து, போலீசார் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.