இடிக்கப்பட்ட 2 கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும்- காடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டி

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இடிக்கப்பட்ட 2 கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.;

Update:2023-06-19 00:12 IST

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இடிக்கப்பட்ட 2 கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இடிக்கப்பட்ட கோவில்கள்

நெல்லை டவுனில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையம் இடிக்கப்பட்டபோது அங்கிருந்த 2 விநாயகர் கோவில்களை புதுப்பித்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் வாக்குறுதி அளித்து, அவற்றை இடித்து அகற்றியது. தற்போது அங்கு பஸ்நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில், கோவில்களை கட்டாதது கண்டிக்கத்தக்கது. இடிக்கப்பட்ட 2 கோவில்களை மீண்டும் கட்டித்தர வேண்டும்.

நெல்லையப்பர் கோவிலில் விரைவில் ஆனித்திருவிழா நடக்க உள்ளது. அதற்கு உரிய ஏற்பாடுகளை மரபு மாறாமல், போக்குவரத்து மாற்றம் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்திட வேண்டும். நெல்லையப்பர் கோவிலின் மதில் சுவரில் துளையிட்டு, சேதப்படுத்தி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது கோவிலுக்கு ஆபத்து. அந்த கடைகளை அகற்ற வேண்டும்.

நடிகர் விஜய்

கோவில்களில் பிரேக் கட்டண தரிசன முறையை கொண்டு வரக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். திருப்பூர் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த கோவிலில் உள்ள சிலைகளை நக்சல் அமைப்பை சேர்ந்த ஒருவர் சேதப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் அரசும், உளவுத்துறையும் மெத்தனமாக செயல்படுகிறது. கனிமவள கொள்ளைக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவளிக்கிறது.

நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வர உரிமை உள்ளது. நடிகர்கள் பலர் கட்சி தொடங்கி உள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பின்னர் யாரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. பெரியார் பற்றி படிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சொன்னதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்