பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2 நாள் பேச்சுப்போட்டிகள்

நாகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2 நாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-06 18:45 GMT


நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடப்பாண்டில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளது. எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களை தேர்வுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக்கல்வி அலுவலர் வழியாகவும், adtd.nagai@gmail.com என்ற இணையதளம் மூலமாகவும் வருகிற 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 12-ந்தேதி நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிக்கு காஞ்சித்தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளில் நடக்கிறது. மறுநாள் 13-ந்தேதி நடக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு பள்ளி மாணவர்கள் காலை 9.30 மணிக்கு வர வேண்டும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்