கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ரூ.2 கோடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

Update: 2022-09-06 20:37 GMT

ரூ.2 கோடியில் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பதிவுபெற்ற கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் ரூ.2 கோடியே 3 லட்சம் மதிப்பில் 10 ஆயிரத்து 496 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:- முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதுடன் கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து மற்றும் இறப்பு உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைள் கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே உயர்த்தி வழங்கி உள்ளார்.

வீட்டுமனைகள்

தொழிலாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவாக 1 லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் உதவித்தொகை சேர்க்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் வீட்டுமனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குரிய நல அட்டை புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்படாதவாறு குறித்த காலத்தில் நிவர்த்தி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், சதாசிவம், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குனர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, வாரிய உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்