படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

படப்பை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2023-07-26 06:35 GMT

மணிமங்கலம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் தசரதன் (வயது 20), சந்தோஷ் (20). இவர்களில் தசரதன் பி காம் 3-ம் ஆண்டும். சந்தோஷ் பி.ஏ. கிரிமினலாஜி 3-ம் ஆண்டும் படித்து வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த அவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

படப்பை அருகே ஆதனூர், வரதராஜபுரம் சாலை சந்திப்பு பகுதியில் வந்த போது அதே மார்க்கத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி டிரைவர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர் வாடிக்கையாகிவிட்டது. இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னலும் கிடையாது.

போக்குவரத்து போலீசாரும் பணியில் ஈடுபடுவது கிடையாது என விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விபத்து ஏற்படும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தவும், போக்குவரத்து சிக்னல் அமைக்கவும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்