புழல் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல் சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறால் பரபரப்பு
புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறை காவலர்களுடன் கைதிகள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புழல்,
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகள் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கஞ்சா, செல்போன் ஆகியவற்றை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனை சிறை காவலர்களும் அவ்வப்போது சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள். இதனால் சிறை அதிகாரிகளை கைதிகள் தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
நேற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள், விசாரணை சிறையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறையில் இருந்த பாலித்தீன் கவரில் செல்போன் ஒன்று சுற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த செல்போனை பறிமுதல் செய்த சிறை காவலர்கள், அது யாருடையது? என அங்கிருந்த கைதிகளான ஆல்வின், ஞானதுரை, விக்னேஸ்வரன், பூபாலன், டேவிட் ராஜா, ஸ்ரீகுமார், அருண் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கரமான வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே மற்ற சிறை காவலர்கள் அங்கு வந்து தடுத்து நிறுத்தினர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது
இதே போல் தண்டனை சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் அங்குள்ள மரத்தடியின் கீழ் செல்போன் இருந்ததை கண்டெடுத்தனர் இந்த 2 சம்பவங்கள் குறித்தும் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் சிறை காவலர்களுடன் தகராறு செய்த 7 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? எனவும் விசாரித்து வருகிறார்.