நஷ்டஈடு வழங்காததால் 2 பஸ்கள் 'ஜப்தி'

குடியாத்தத்தில் விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Update: 2023-10-12 17:12 GMT

போலீஸ்காரர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபன். இவரது மனைவி செல்வியம்மாள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தீபன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

அவர், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் கீழ்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்களில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

நஷ்டஈடு வழங்க உத்தரவு

இதனைத்தொடர்ந்து தீபனின் மனைவி செல்வியம்மாள் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்கக்கோரி போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீபன் குடும்பத்தினருக்கு ரூ.75 லட்சம் வட்டியுடன் சேர்த்து வழங்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து செல்வியம்மாள் வழக்கறிஞர் எஸ்.தேவராஜ் மூலமாக குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த மாதம் 20-ந் தேதி சார்பு நீதிபதி பிரபாகரன், இழப்பீடு தொகையாக வட்டியுடன் சேர்த்து 80 லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் எனவும், தவறினால் 10 டவுன் பஸ்களை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

2 பஸ்கள் ஜப்தி

இருப்பினும் போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீட்டு வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து குடியாத்தம் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் வி.பிரேமலதா, கே.தங்கராஜ் மற்றும் தீபன் குடும்பத்தினர், வழக்கறிஞர்களுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் 2 டவுன் பஸ்களில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு பஸ்களை ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜரான போக்குவரத்து கழக அதிகாரிகள் நஷ்டஈடுக்காக முதல் தவணையாக 9 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இன்று (நேற்று) ரூ.9 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.

அதைத்தொடர்ந்து 2 பஸ்களையும் நீதிபதி பிரபாகரன் விடுவித்தார். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்