தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி; ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வந்தபோது சோகம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வந்த, 2 சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-07-26 20:31 GMT

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வந்த, 2 சிறுவர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆடி அமாவாசை திருவிழா

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தினருடன் பக்தர்கள் வருகை தந்து, குடில்கள் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்வார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை

தனியார் வாகனங்கள் காரையாறு செல்ல அனுமதியில்லை. அம்பை அகஸ்தியர்பட்டிக்கு வந்து அங்கிருந்து பக்தர்கள் அரசு சிறப்பு பஸ்களில் செல்லலாம். இவ்வாறு நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை அரசு பஸ்களில் பக்தர்கள் வந்து-செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொள்ள மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்த உறவினர்களான சரவணன், விஷ்ணுகுமார் ஆகியோர் குடும்பத்துடன் நேற்று காலை ரெயிலில் நெல்லை வந்தனர்.

சரவணன் அங்குள்ள ஒரு பேக்கரியில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். விஷ்ணுகுமார் நெசவு தொழில் செய்து வருகிறார்.

ஆற்றில் மூழ்கி பலி

நெல்லைக்கு வந்த இருவரது குடும்பத்தினரும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் சரவணன் மகன் கார்த்திக் (வயது 8), விஷ்ணுகுமாரின் மகன் ஹரிஷ்குமார் (10) ஆகிய 2 சிறுவர்களும் கோவில் அருகே ஓடும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். திடீரென 2 பேரும் எதிர்பாராதவிதமாக ஆற்று தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பதறியடித்தபடி வந்து சிறுவர்கள் 2 பேரையும் மீட்டனர். பின்னர் அங்கிருந்து அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

விசாரணை

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 சிறுவர்கள் உடல்களை கைப்பற்றி அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்த 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்