தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொன்ற 2 பேர் கைது

தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொன்ற 2 பேர் கைது

Update: 2022-12-20 18:45 GMT

கோவை

கோவை அருகே செட்டிப்பாளையத்தில் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாக்குதல்

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களான தமிழ்செல்வன், ஞான பிரகாஷ் ஆகியோருடன் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். அவர்கள் மது குடித்து விட்டு வெளியே வரும் போது 5 பேர் கொண்ட கும்பலுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப் படுத்தினர். பின்னர் பிரபாகரன் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று சென்றார்.

இந்த நிலையில் அந்த 5 பேர் கொண்ட கும்பலும் ஒரு காரில் அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். காரில் வந்த நபர்கள் அந்த ஸ்கூட்டரை முந்தி சென்று வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் வந்த ஞானபிரகாஷ், தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

கல்லைப்போட்டு கொலை

அந்த கும்பலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனிடையே அந்த கும்பல் ஆத்திரத்தில் பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் தாக்கியதுடன், அங்கே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரபாகரனை அவரது நண்பர்கள் மீட்டு கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் மது வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த நபரின் செல்போன் எண் விபரத்தை வைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த மணி கண்டன், சந்திரசேகர் ஆகிய 2பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் 2 பேர் உள்பட ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த 3 பேர் செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து கட்டிடங்களுக்கு கான்கிரீட் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்