காஞ்சீபுரம் அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-16 10:54 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாநிலங்களில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்படி, காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ச.ரம்யா, குடிமை பொருள் காவல் ஆய்வாளர் சசிகலா, குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் இந்துமதி, குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த லாரியை விரட்டிச் சென்று ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பெரும்புலிவாக்கம் என்ற இடத்தில் பிடித்து சோதனை செய்தனர்.

2 பேர் கைது

அதில் சுமார் 200 மூட்டைகளில் சுமார் 8 டன் பொது விநியோகத் திட்ட அரிசி எவ்வித ஆவணங்களும் இன்றி கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியில் வந்தவர்கள் தப்பினர். லாரியை பிடித்து காஞ்சீபுரம் நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் காஞ்சீபுரம் சி.வி.எம். நகரை சேர்ந்த காஜாமொய்தீன் (43) எஸ்.வி.என். பிள்ளை தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் கிளை சிறைசாலையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவான ஜீவானந்தம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்