64 சிலிண்டர்களை கடத்திய 2 பேர் கைது

கள்ளச்சந்தையில் விற்பதற்காக 64 சிலிண்டர்களை கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-29 20:55 GMT

கள்ளச்சந்தையில் விற்பதற்காக 64 சிலிண்டர்களை கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உணவு கடத்தல் பிரிவு இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா உத்தரவின் பேரில் மதுரை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் ஆகியோர் மதுரை மாவட்டம் மேலமாத்தூர் அருகே குடிமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 64 கியாஸ் சிலிண்டர்கள் இருப்பது தெரியவந்தது. அது குறித்து போலீசார் விசாரித்த போது கள்ளச்சந்தையில் விற்பதற்காக வீட்டு உபயோக சிலிண்டர், வணிக சிலிண்டர் ஆகியவற்றை கடத்தி செல்வது தெரியவந்தது. அதை தொடர்ந்து ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

அதில் தனியார் ஏஜென்சியில் சுமைதூக்கும் பணியாளராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கோவில்பாப்பாகுடியை சேர்ந்த பழனி (வயது 46), பழங்காநத்தம் பைக்காராவை சேர்ந்த அவரது உறவினர் வினோத் (31) என்பதும், அவர்கள் கள்ளச்சந்தையில் சிலிண்டரை விற்க கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 35 வீட்டு உபயோக சிலிண்டர்கள், 29 வணிக சிலிண்டர்கள் என மொத்தம் 64 சிலிண்டர்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்