சிவகாசி,
சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கோபாலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வசித்து வரும் காளிராஜ் என்பவரின் மாட்டு கொட்டகை அருகே ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மாட்டு கொட்டகையில் சோதனை செய்த போது அங்கு 550 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த காளிராஜ் (வயது 32), முருகன் (46) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.12,100-யும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வெளியூரில் இருந்து மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வரும் மொத்த வியாபாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.