ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 31). ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டியன் மகன் காவிரி உடையார் (32). இவர் திருப்பூரில் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்கு வந்த இவர் அங்கு வீடு கட்டி வருகிறாா். இதற்காக மண், ஜல்லி கற்கள் ஆகியவை அந்த தெருவில் கொட்டப்பட்டு உள்ளது. அந்த வழியாக முத்துகுமார் ஆட்டோவில் சென்றபோது, ஜல்லி கற்கள் தெருவில் கொட்டப்பட்டது குறித்து அவருக்கும், காவிரி உடையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் காவிரி உடையார் வளர்த்து வந்த நாயை முத்துகுமார் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காவிரி உடையார், அதே பகுதியை சேர்ந்த நயினார் மகன் மற்றொரு உடையார் மற்றும் ஒருவர் சேர்ந்து முத்துகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து காவிரி உடையார், மற்றொரு உடையார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.