பாபநாசம் பெண்ணிடம் ரூ.19 ஆயிரம் அபேஸ்

வங்கி அதிகாரிபோல் பேசி பாபநாசத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ.19 ஆயிரத்தை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-01 18:45 GMT

பாபநாசம்:

வங்கி அதிகாரிபோல் பேசி பாபநாசத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ.19 ஆயிரத்தை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போனியில் பேசிய நபர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியப்பிரகாஷ் (வயது24). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சிவரஞ்சனி (22). இவர் பாபநாசத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சம்பவத்தன்று சிவரஞ்சனியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, புதிதாக ஏ.டி.எம். எண் தர உள்ளோம், வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண், அதன் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை கேட்டார்.

போலீசார் விசாரணை

இதை உண்மை என்று நம்பிய சிவரஞ்சனி கணவர் சூரியப்பிரகாஷ் உதவியுடன் ஏ.டி.எம். அட்டை எண் மற்றும் அதன் ரகசிய எண்ணை செல்போனில் பேசிய நபரிடம் தெரிவித்தார்.

அடுத்த சில மணிநேரங்களில் சிவரஞ்சனியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியப்பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சிவரஞ்சனி ஆகியோர் தொடர்புடைய வங்கிக்கு சென்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம். கார்டு செயல்பாடு தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து சூரியப்பிரகாஷ், சிவரஞ்சனி ஆகியோர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிபோல் பேசி வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்