கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேர் கைது
மீன்சுருட்டி அருகே கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருப்பு கொடி காட்ட முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம் ஒழுகச்சேரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அணைக்கரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் மதியம் 2 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையிலான நிர்வாகிகள் 10 பேர் 'நீட்' தேர்வில் கவர்னர் கையெழுத்திடாததை கண்டிக்கும் விதமாக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்தனர்.
19 பேர் கைது
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய பொருளாளர் சக்கராயுதம் உள்ளிட்ட 9 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர்.
போலீசார் பாதுகாப்பு
இதையடுத்து மதியம் 2.50 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் பகுதியை கடந்த கவர்னர் ஆர்.என்.ரவி மதியம் 3 மணியளவில் அரியலூர் மாவட்ட எல்லையை கடந்து தஞ்சை மாவட்ட எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட்டார். இதையொட்டி சென்னை-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரியலூர் மாவட்ட எல்லை தொடங்கும் கல்லக்குடி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம்-கங்கை கொண்ட சோழபுரம், மீன்சுருட்டி குறுக்கு ரோடு வழியாக அணைக்கரை வரை 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.