பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் ரூ.19¼ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலுக்கு, கார்த்திகை மாதத்தில் மட்டும் ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு, கார்த்திகை மாதத்தில் மட்டும் ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் வருகை
சபரிமலை சீசனையொட்டி அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள், பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கார்த்திகை மாதம் பிறந்தாலே, பழனி அடிவாரத்தில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு புகழ்பெற்ற பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர்.
இதனால் அடிவார பகுதியில் பஞ்சாமிர்த விற்பனை படுஜோராக இருக்கும். மேலும் தங்கரத புறப்பாட்டிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
10¾ லட்சம் பேர் தரிசனம்
இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பழனி முருகன் கோவிலில் தமிழ்மாதமான கார்த்திகை மாதத்தில் மட்டும் (அதாவது கடந்த நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 12-ந்தேதி வரை) 10 லட்சத்து 84 ஆயிரத்து 242 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ரோப்கார் மூலம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 678 பேரும், மின்இழுவை ரெயில் மூலம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 956 பேரும் சென்றுள்ளனர்.
இதேபோல் அன்னதானத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 549 பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதுதவிர கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பஞ்சாமிர்தத்தை 3 லட்சத்து 97 ஆயிரத்து 125 பேரும், மோர், சுக்குகாபியை 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேரும் வாங்கி பயன் அடைந்துள்ளனர்.
ரூ.19 கோடி வருவாய்
கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வகையில் உண்டியல், பஞ்சாமிர்தம், பிரசாதம், தங்கரதம், தங்கத்தொட்டில், தரிசன கட்டண சீட்டு மற்றும் இதர கட்டணங்கள் மூலம் கோவிலுக்கு ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதில் பஞ்சாமிர்தம் மூலம் ரூ.8 கோடியே 58 லட்சத்து 3 ஆயிரத்து 710-ம், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடியே 75 லட்சமும், லட்டு, அதிரசம் போன்ற பிரசாத பொருட்கள் விற்பனை மூலம் ரூ.70 லட்சத்து 3 ஆயிரத்து 485-ம் வருமானமாக கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.