மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் அமைய உள்ளது. ஆரம்ப கட்ட பணியாக தற்போது சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழித்தடம் 5-ல் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817 கோடியே 54 லட்சம் செலவில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா பிராஜெக்ட்ஸ் நிர்வாக துணைத்தலைவர் ராமன் கபீல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது, மெட்ரோ ரெயில் நிலையத்தின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த ஒப்பந்தம் ஜைகா நிதியுதவியின் ஒரு பகுதியாகும். வழித்தடம் 5-ல் கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ, சீனிவாச நகர் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலைய முனையம் மெட்ரோ மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை மெட்ரோ என 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கும், கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், பாதைகள், சாய்வு பாதைகள் போன்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் 100 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.