பூட்டிய வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-02 19:16 GMT

நகைகள் திருட்டு

புதுக்கோட்டை எழில்நகரை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்கள் வசித்து வரும் வீட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. இதனால் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேஸ்வரியின் பூட்டிய வீட்டிற்குள் பின்பக்கமாக கதவின் பூட்டினை உடைத்து மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.

மேலும் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி விட்டு தப்பியோடினர். இந்த நிலையில் மறுநாள் காலையில் வீட்டிற்கு உரிமையாளர்கள் வந்த போது பீரோ திறந்து கிடந்ததும், அதில் இருந்த நகைகள் திருட்டு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இதற்கிடையில் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய் சிறிது தூரம் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்