மதுரை விமான நிலையம் அருகே 17-ம் நூற்றாண்டு கோவில் - பாதுக்காக்க ஆய்வாளர்கள் கோரிக்கை

மண்ணில் புதைந்த நிலையில் கி.பி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதியேறுதல் கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2022-06-04 07:23 GMT

மதுரை,

மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் மூனீஸ்வரன், முனைவர் லட்சுமன மூர்த்தி ஆகியோர், தொல்லியல் மாணவர்களுடன் இணைந்து, மதுரை விமான நிலையம் அருகே பரம்புப்பட்டியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மண்ணில் புதைந்த நிலையில் கி.பி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதியேறுதல் கோவிலை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், சங்க காலம் முதல் தமிழர்களின் கலாச்சாரத்தில் நடுகற்கள் வழிபாடு உள்ளதாகவும், இறந்த போர் வீரர்களின் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்ததாகவும் தெரிவித்தனர்.

எதிரி நாட்டு பொருட்களை கவர்தல், மீட்டல், நாட்டை பாதுகாத்தல், புலி, பன்றி, யானை ஆகியவற்றுடன் சண்டையிடுதல், போரிடுதல் ஆகிய காரணங்களால் மரணமடைந்த வீரருடன் உடன்கட்டை ஏறிய அவரது மனைவிக்கு நடுகல் அமைத்து, அதன் மீது எழுப்பும் கோவிலுக்கு மாலைக்கோவில் என பெயர் வைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் பெயர் மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சுவடுகளை அழியாமல் பாதுகாக்க, இது போன்ற கற்சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்