1.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நடவு முடிந்தது

1.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நடவு முடிந்தது

Update: 2022-10-23 18:45 GMT

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்தன. மழை காரணமாக குறுவை அறுவடை மற்றும் நடவுப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் வரலாற்றில் முதன்முறையாக மே மோதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

10 ஏக்கரில் அறுவடை

தஞ்சை மாவட்டத்தில் இன்னும் 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் மீதம் உள்ளது. வழக்கமாக குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் மழை பெய்து வருவதாலும், நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அறுவடை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. வெயில் அடித்த பின்னர் அறுவடை செய்யலாம் என பல பகுதிகளில் அறுவடை பணிகள் தாமதம் ஆகிறது.

குறிப்பாக தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் பகுதிகளில் இன்னும் அறுவடை பணிகள் பாக்கி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறுவை அறுவடை பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை அறுவடை பகுதிகளில் தான் தாளடி நடவு மேற்கொள்வதால் அதுவும் தாமதம் ஆகிறது.

1.75 லட்சம் ஏக்கரில் நடவு

மேலும் பல பகுதிகளில் மழை காரணமாக சம்பா நடவுப்பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் நடவுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதர பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாத இறுதி வரை சம்பா, தாளடி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்