பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு 'சீல்'
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்பாடு
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ.-க்கள் தலைமையில் தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை குழுவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் அருண் மற்றும் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில், கோத்தகிரி மார்க்கெட்டில் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
17 கடைகளுக்கு 'சீல்'
கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு, 8 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்கள் நடந்த சோதனையில் ஊட்டி தாலுகா உள்பட 6 தாலுகாக்களிலும் 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர நடமாடும் உணவக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் அம்ரித் ஊட்டி நகராட்சி மார்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என நேரில் ஆய்வு செய்தார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய நடமாடும் வாகனத்தை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.