சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.167½ கோடியில் புதிய திட்டங்கள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.167½ கோடியில் புதிய திட்டங்கள்

Update: 2022-08-25 11:48 GMT

திருப்பூர்,

திருப்பூரில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167½ கோடியில் புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்

திருப்பூரில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167 கோடியே 58 லட்சத்தில் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதன்படி, கோவையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். புதிய கயிறு குழுமங்களை அமைத்தல், புதிய சந்தைகள் அடையாளம் காணுதல், நுகர்வோருடன் பிணைப்பை ஏற்படுத்தி கயிறு வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலை உலக அரங்குக்கு கொண்டு செல்லுதல், நவீன வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வங்களை உருவாக்குதல், இந்த தொழிலில் புதுமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படும்.

புதிய கயிறு குழுமங்கள்

மேலும் ரூ.36 கோடியே 60 லட்சம் மதிப்பில் 4 புதிய கயிறு குழுமங்கள் அமைப்பதற்கான ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார். இதில் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் ரூ.13 கோடியே 95 லட்சம் மதிப்பிலும், உடுமலையில் ரூ.6 கோடியே 92 லட்சம் மதிப்பிலும், கரூர் மாவட்டம் கே.பரமத்தியில் ரூ.6 கோடியே 93 லட்சம் மதிப்பிலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.8 கோடியே 80 லட்சம் மதிப்பிலும் புதிய கயிறு குழுமங்கள் அமைய உள்ளன.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நீண்ட நாள் பிரச்சினையான நிதி வசதியை பிணையமில்லாமல் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 சதவீதம் உத்தரவாதமும், ரூ.40 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 சதவீத உத்தரவாதமும் மத்திய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் இணைந்து தமிழக அரசு அளிக்கிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் மாநிலமாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.1 கோடியே 19 லட்சத்துக்கான கடன் தொகையை திருப்பூர் மண்டலத்தை சேர்ந்த 5 பேருக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

இலச்சினை வெளியீடு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சட்டப்பூர்வ வாரியங்கள், மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தலைமை கூட்டுறவு நிறுவனங்களை ட்ரட்ஸ் எனப்படும் வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளங்களின் கீழ் கொண்டு வர தேவையான மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி செயல்முறை தளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

குறைந்த வட்டியில் பிணையமில்லா கடன் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளை செய்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்தல், வரி மற்றும் தணிக்கை போன்றவற்றுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கு உதவ எம்-டிப் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அது பேமி டி.என். (FaMe TN) என்ற முத்திரையுடன் செயல்படுகிறது. இதற்கான இலச்சினையை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

புதிய தொழிற்பேட்டை

முதல்-அமைச்சர் முன்னிலையில், FaMe TN நிறுவனமும், ஓ.என்.டி.சி. நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். இன்ஸ்டடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்துடனும், வேல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடனும் FaMe TN நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கோவை மாவட்டம் சொலவம்பாளையத்தில் 42.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.18 கோடியே 13 லட்சத்தில் புதிய தனியார் தொழிற்பேட்டை, சேலம் மாவட்டம் அரியகவுண்டம்பட்டியில் ரூ.24 கோடியே 55 லட்சம் மதிப்பில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்கான தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் 100 தொழில் கூட அலகுகள் கொண்ட அடுக்குமாடி உற்பத்தி வளாகம், காட்சி மையம் மற்றும் பொது வசதி மையம், கோவை மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் தங்கும் விதி கட்டுவதற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் நாரணாபுரத்தில் ரூ.15 கோடியே 34 லட்சம் மதிப்பில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்கான பொது வசதி மையத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கண்காட்சி அரங்கு

முன்னதாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்