சென்னை விமான நிலையத்தில் ரூ.16½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.16 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த சூட்கேசின் கைப்பிடி சற்று வித்தியாசமாக இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது, தங்கத்தை கம்பிபோல் மாற்றி அதனை சூட்கேஸ் கைப்பிடிக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 15 கம்பிகள் கொண்ட 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கஇலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.