பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம்
பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை, வடுகபைரவர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது.
சிங்கம்புணரி
பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை, வடுகபைரவர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது.
வருடாபிஷேக விழா
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை மற்றும் வடுக பைரவர் கோவிலில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. பிரான்மலை மலைப்பகுதி சுமார் 5 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்த மலையில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று தலங்களாக சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார். பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் விஸ்வநாதர், குயில்முகநாயகி அம்மன், பூலோகத்தில் உமாமகேஸ்வரர் விசாலாட்சி அம்பாளுடனும், கைலாயத்தில் திருமண கோலத்தில் மங்கை பாகர் தேனம்மை அருள்பாலித்து கொண்டிருக்கிறார். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. இங்கு முல்லைக்கு தேர் கொடுத்த பாரி கொடை சிறப்பை வெளிப்படுத்தும் சிற்பம் உள்ளது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் வருடாபிஷேகத்தையொட்டி கணபதி ஹோமத்துடன் கலச பூஜை நடைபெற்றது. கோவில் முதல் ஸ்தானிகர், சிவகங்கை மாவட்ட அறநிலையத்துறை மண்டல கமிட்டி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் யாக வேள்வி நடத்தினர்.
அபிஷேகம்
இதைதொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று புனித நீரை மங்கை பாகர் தேனம்மை மற்றும் வடுக பைரவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் கண்காணிப்பாளர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கற்பூர சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிரான்மலை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் வருடாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது.