செந்தில் பாலாஜி வழக்கில் வரும் 15-ந்தேதி தீர்ப்பு - கோர்ட்டு அறிவிப்பு

அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Update: 2024-02-07 14:17 GMT

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை என்றும், இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், வழக்கின் விசாரணையை முடக்கி வைக்கும் நோக்கிலும், குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்