ரூ.158 கோடி திட்ட பணிகளுக்குஅடிக்கல் நாட்டு விழா

திண்டுக்கல்லில் ரூ.158 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2023-05-28 19:00 GMT

அடிக்கல் நாட்டு விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,532.82 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாநகராட்சி எம்.வி.எம். நகர் நீரேற்று நிலைய வளாகத்தில் ரூ.158 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.132.52 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.19 கோடியே 68 லட்சத்தில் வடிகால், சிறுபாலம் கட்டும் பணி மற்றும் ரூ.6 கோடியே 72 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி ஆகியவற்றுக்கு நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் பூங்கொடி வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி திட்ட விளக்கவுரையாற்றினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் வாழ்த்தி பேசினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்து பேசினர்.

10 ஆயிரம் பேருக்கு வேலை

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், அரசு அனுமதி கிடைத்தால் நகராட்சி துறையில் 10 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும். அந்த வேலையும் உங்கள் வீடு தேடி வரும். எந்த தவறும் நடக்காமல் உங்களின் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும். அந்த காலம் விரைவில் வரும்.

138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் ஆகியவற்றில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு மட்டும் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியிருக்கிறார். திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.27 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

ரூ.121 கோடி ஒதுக்கீடு

அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், கூட்டுக்குடிநீர் மறுசீரமைப்பு திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். இதற்காக ரூ.132.52 கோடியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு உடனடியாக ஒதுக்கி திண்டுக்கல் மக்களுக்கு நன்மை செய்துள்ளார். இதன் மூலம் காவிரியில் இருந்து தினமும் 18 லட்சம் லிட்டர் தண்ணீரை திண்டுக்கல்லுக்கு கொண்டுவர முடியும். மேலும் இந்த திட்டத்துக்காக காவிரி ஆற்றுப்படுகையில் புதிதாக கிணறுகளும் தோண்டப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வளர்ச்சி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.121 கோடி ஆகும். ஆத்தூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 196 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரணை திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.600 கோடியில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி

கன்னிவாடியை அடுத்த அடுகமலை பிரிவில் இருந்து தோணிமலைக்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகள் அந்த சாலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தான் தோணிமலையில் சாலை சீரமைப்பு பணி நடக்கிறது. இது போன்ற அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

திண்டுக்கல்லில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க தி.மு.க. ஆட்சியில் தான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். குடிநீர் திட்டத்துக்காக பிற மாவட்டங்களை காட்டிலும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு தான் ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

தினமும் குடிநீர்

இதைத் தொடர்ந்து காந்திராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், திண்டுக்கல்லில் நிலவிய குடிநீர் பிரச்சினையை கடந்த அ.தி.மு.க. அரசால் தீர்த்து வைக்க முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திண்டுக்கல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பேரணை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்த திட்டம்.

பின்னர் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும் தான் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்பெல்லாம் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைத்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தினமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது என்றார்.

வளர்ச்சி பணிகள்

அதையடுத்து பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் பேசுகையில், திண்டுக்கல் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக மாறிய பிறகு அ.தி.மு.க. ஆட்சி தான் நடந்தது. அப்போது திண்டுக்கல்லுக்கு எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடந்த ஆட்சி காலத்தில் மாநகராட்சிக்கு கடும் நிதி சுமை இருந்தாலும் கூட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

விழாவில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாநகராட்சி ஆணையர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்