பொங்கல் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் முன்பு இன்று அதிகாலையில் மக்கள் பொங்கலிட்டு இயற்கையை வணங்குவது வழக்கம். அதேபோல் பொங்லிடும் மக்கள் இன்று அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிடுவார்கள்.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். அடுத்த நாளான நாளை (திங்கட்கிழமை) திருவள்ளுவர் திருநாளாகவும், நாளை மறுநாள் உழவர் திருநாளாகவும் கொண்டாடப்பட இருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதனால் குமரி மாவட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள், கடைவீதிகள், சுற்றுலாத்தலங்கள், கடற்கரைப் பகுதிகள் போன்றவற்றில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பாதுகாப்பு பணி நேற்று மாலையில் இருந்து தொடங்கியது. நாளை வரை இந்த பாதுகாப்பு பணி தொடரும். முக்கிய பகுதிகளில் மப்டி உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள். முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.