சாராய ஊறலுக்கு பயன்படுத்தும் 1,500 கிலோ வெல்லம் பறிமுதல்

குடியாத்தம் அருகே சாராய ஊறலுக்கு பயன்படுத்தும் 1,500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-09 17:45 GMT

குடியாத்தம் அடுத்த சூராளூர் கிராமத்தில் பெருமாள் (வயது 67) என்பவர் சாராய ஊறலுக்கு பயன்படுத்தக்கூடிய வெல்லத்தை பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் சூராளூரில் பெருமாள் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது வீட்டின் பின்புறம் சாராய ஊறலுக்கு பயன்படுத்தக்கூடிய 900 கிலோ எடை கொண்ட 18 வெல்லமூட்டைகள் மற்றும் 600 கிலோ எடை கொண்ட 20 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் என மொத்தம் 1,500 கிலோ வெல்லம் இருந்தது தெரியவந்தது. அவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, பெருமாளை மேல் நடவடிக்கையாக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப் பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்