27 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை
பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் 27 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நகலை எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவிடப்பட்டது.;
பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் 27 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நகலை எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவிடப்பட்டது.
மோசடி வழக்கு
சேலத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வின்ஸ்டார் இந்தியா மற்றும் சவுபாக்யா புரமோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை சேலத்தில் தொடங்கினார். அந்த நிறுவனங்கள் மூலம் குறைந்த முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறினார். மேலும் வீட்டுமனைகளும் குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதை நம்பி கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள், புரோக்கர்கள் என மொத்தம் 29 பேர் பணம் கட்டிய பொதுமக்களுக்கு தவணை முடிந்தும் எவ்விதமான பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 1,686 பேர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 29 பேர் மீதும், வின்ஸ்டார் நிறுவனத்தின் மீதும் தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட மொத்தம் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டது. இதனை குற்றம் சாட்டபட்டவர்களுக்கு வழங்க நகல்கள் தயார் செய்யப்பட்டு வேன் மூலம் கோவை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் நேற்று கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இதில் சிவக்குமார் உள்பட 27 பேர் வந்து இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கோர்ட்டில் ஆஜராகாத பாலமுருகன், சரவணன் ஆகிய 2 பேர் மாலை 5.30 மணிக்குள் நேரடியாக கோர்ட்டுக்கு வந்து குற்றப்பத்திரிகை நகல்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தினார்.
ரூ.14 லட்சம் செலவு
ஆனால் அவர்கள் 2 பேரும் வரவில்லை. இதனால் அவர்கள் 2 பேருக்கும் வழங்க குற்றப்பத்திரிகை நகல் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 15 லட்சம் குற்றப்பத்திரிக்கை நகல் எடுக்க மட்டும் அரசு ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.