மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசு பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-08 20:49 GMT

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசு பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக ஊழியர்

சேலம் அழகாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 24). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் சேலம் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சேலத்தில் பணியாற்றி வரும் அரசு பெண் அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் அறிமுகமானார்கள்.

இருவரும் சேர்ந்து பணம் கொடுத்தால் மின்சார வாரியத்தில், அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பல தவணைகளில் அவர்களது வங்கி கணக்கு மற்றும் நேரில் என மொத்தம் ரூ.15 லட்சம் கொடுத்தேன். சில நாட்களுக்கு பிறகு அரசு வேலை பற்றி கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டே போது 2 பேரும் சேர்ந்து என்னை மிரட்டினர்.

தாய், மகன் மீது வழக்கு

எனவே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு குறித்து உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த கோர்ட்டு, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில் தாய், மகன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்