விடுதலை சிறுத்தை, ஆதிதமிழர் பேரவை கட்சியினர் 15 பேர் கைது

Update: 2023-01-11 16:13 GMT


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் பேசிய பேச்சை கண்டித்து தாராபுரத்தில் அவரது உருவ பொம்மை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 8 பேர் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் 7 பேரும் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

உருவபொம்மை எரிக்க முயற்சி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாகவும், சட்டமன்றத்தில் தேசியகீதத்தை அவமதிப்பு செய்ததோடு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காததை கண்டித்தும் திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நா.தமிழ்முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் நகரச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தி.க.அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

15 பேர் கைது

இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன் மூலம் அழைத்துசெல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதே போன்று ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழ்நாடு கவர்னரை கண்டித்து மாவட்ட செயலாளர் பொன்.ப.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்