1,422 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு; கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் 1,422 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-04-13 19:24 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் 1,422 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

ஊட்டச்சத்து பெட்டகம்

குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின் கீழ் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:-

குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவி, ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்டவற்றை பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி மூலம் செய்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு அக்குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த "ஊட்டச்சத்தை உறுதி செய், எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 1,422 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு மூலம் பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆர்.யு.டி.எப். பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஊட்டச்சத்து

மேலும் கண்டறியப்பட்ட மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 884 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி தனியார் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை-நிலமெடுப்பு) ரேவதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, சென்னை வைஷ்ணவி நலன் மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் மோகன் ராமசந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ராகிணி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜய மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்