1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன

1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 5,63,826 பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7,96,166 நோட்டு புத்தகங்களும் வினியோகிக்கப்படுகின்றன.;

Update:2023-06-03 02:56 IST

ஈரோடு மாவட்டத்தில் 1,410 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 5 லட்சத்து 63 ஆயிரத்து 826 பாடப்புத்தகங்கள், 7 லட்சத்து 96 ஆயிரத்து 166 நோட்டுப்புத்தகங்களும் வினியோகம் செய்யப்பட உள்ளன.

பள்ளிக்கூடம் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கு வருகிற 7-ந் தேதி அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து உள்ளார். அதன்படி பள்ளிக்கூடங்கள் திறப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை, பள்ளிக்கூட வளாகங்கள் தூய்மை செய்தல், வகுப்பறைகள் பராமரிப்பு என்று பல்வேறு பணிகளில் அரசு பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் 7-ந் தேதி திறக்கும் என்று அறிவித்தாலும், கடந்த 1-ந் தேதி முதல் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் ஆசிரிய-ஆசிரியைகள் தங்கள் பணிகளை தொடங்கி, புதிய கல்வி ஆண்டில் வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளை வரவேற்க தயாராகி வருகிறார்கள்.

1,410 பள்ளிக்கூடங்கள்

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிக்கூடங்கள், நடுநிலை பள்ளிக்கூடங்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்கள், கஸ்தூரிபா காந்தி உறைவிட பள்ளிக்கூடங்கள், நலத்துறை பள்ளிக்கூடங்கள் என அரசு பள்ளிகள் 1,289 உள்ளன. இதுபோல் அரசின் நிதி பெறும் பள்ளிக்கூடங்கள் 121 உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் உள்பட பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்குகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தை ராஜன் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகள் பள்ளிக்கூடங்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் 1,410 பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வினியோகம்

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான புத்தகங்கள் நேற்று முன்தினம் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான புத்தகங்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு நேற்று வினியோகம் செய்யப்பட்டது.

இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் பழைய கல்வி மாவட்டங்கள் அளவில் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டாரத்துக்குமான மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வட்டாரத்துக்கு உள்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு வாகனங்கள் மூலம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடங்களில் இருந்து தங்கள் மாணவ-மாணவிகளுக்கு உரிய புத்தகங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டால் போதும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி லாரிகள் மூலம் புத்தகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 63 ஆயிரத்து 826 பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. 7 லட்சத்து 96 ஆயிரத்து 166 நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. புத்தகங்கள் அனைத்தும் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய புத்தகங்கள் வரவில்லை என்றால் உடனடியாக பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்" என்றார்.

ஈரோட்டில் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. ஆனால், அவை ஆசிரிய-ஆசிரியைகளை புத்தக வினியோக மையத்துக்கு வரவழைத்து வழங்கப்பட்டது. பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக லாரிகளில் சென்று வினியோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்