பெட்ரோல் குண்டுவீச்சில் தொடர்புடைய 14 பேர் கைது -டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
தமிழகம் முழுவதும், மண்எண்ணெய், பெட்ரோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மண்எண்ணெய், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சில வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கைக்கு பிறகு வன்முறை சம்பவங்கள் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது.
14 பேர் கைது
இந்த நிலையில் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றில் 11 வழக்குகளில், 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.