ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
ரியல் எஸ்டேட் அதிபரிடம் வாடகை கார்களை விற்று ரூ.14 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
ரியல் எஸ்டேட் அதிபரிடம் வாடகை கார்களை விற்று ரூ.14 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரியஸ் எஸ்டேட் அதிபர்
கோவையை அடுத்த கிணத்துக்கடவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய நண்பர் ஒருவர் மூலம் ஆனைமலையை சேர்ந்த குங்கும பிரகாஷ் (34) என்பவர் அறிமுகம் ஆனார். இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம், கார் வாங்க விரும்புவ தாக சிவக்குமார் கூறினார்.
அதற்கு அவர், தன்னிடம் 2 கார்கள் உள்ளன. ரூ.14 லட்சம் பணம் கொடுத்தால் 2 கார்களையும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறினார். அதை நம்பிய சிவக்குமார் ரூ.14 லட்சம் பணத்தை குங்கும பிரகாசிடம் கொடுத்து கார்களை வாங்கினார்.
ரூ.14 லட்சம் மோசடி
இந்த நிலையில் தனியார் கார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று, அந்த கார்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறினர். அவர்களிடம் சிவக்குமார் குங்கும பிரகாசிடம் ரூ.14 லட்சம் கொடுத்து கார்களை வாங்கியதாக கூறினார்.
உடனே அவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து சிவக்குமாரிடம் இருந்த கார்களை வாங்கி சென்றனர். இதனால் குங்கும பிரகாஷ் வாடகை கார்களை ஏமாற்றி சிவக்குமாரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
வாலிபர் மீது வழக்கு
இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் குங்குமப்பிரகாஷ் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.