ரூ.14½ கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர், மீன்பிடி இறங்குதளம் கட்டும் பணிகள்
பிள்ளைச்சாவடியில் ரூ.14½ கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர்- மீன்பிடி இறங்குதளம் கட்டும் பணிகளை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடற்கரையோர கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு மீனவ குடும்பங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான மீன்பிடி இறங்குதளமும் அமைத்துக்கொடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வானூர் தாலுகா பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்பில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
கலெக்டர் ஆய்வு
இப்பணிகளை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
பிள்ளைச்சாவடியில் மழை மற்றும் புயல் காலங்களில் அதிகப்படியான காற்று மற்றும் கடல்சீற்றங்களால் கடல் அரிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு உறுதி
இப்பணிகள் மூலமாக 39 இயந்திரப்படகுகள், 25 நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் நிறுத்துவதற்கு வழிவகையும், மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கு வழிவகையும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 350-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, வானூர் தாசில்தார் செல்வம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி, சார் ஆய்வாளர் பெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.