கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே இன்று 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 93.87 சதவீதத்தினர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதேபோல் 83.07 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 11 கோடியே 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கையிருப்பில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசி உள்ளது. தினந்தோறும் 15 முதல் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், அனைவருக்கும் தடுப்பூசி போட தாமதமாகும் என்பதால் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
அதன்படி, தமிழகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மட்டும் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும், 'பூஸ்டர்' தடுப்பூசியானது முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படுகிறது, மெகா தடுப்பூசி முகாம்களிலும் அவர்களுக்கு போடப்படும். மேலும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியின் மூலம் ரூ.388-க்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.