1,360 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் வந்தது
பீகாரில் இருந்து நாமக்கல்லுக்கு 1,360 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் வந்தது.;
நாமக்கல்:
இந்திய உணவு கழகத்தின் மூலம் பீகாரில் இருந்து 1,360 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 26 வேகன்களில் வந்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் 75 லாரிகளில் ஏற்றப்பட்டு, நாமக்கல் அருகே உள்ள புதுப்பட்டியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து 1,350 டன் கடுகு, புண்ணாக்கு மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 27 வேகன்களில் வந்திருந்த கடுகு, புண்ணாக்கு மூட்டைகள் அனைத்தும் 80 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல், திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.