1,330 மணி நேரம் தொடர் நிகழ்ச்சி: திருக்குறள் வாசிப்பு உலக சாதனையில் பங்கேற்ற ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள்; குறள்கூறி விளக்கம் அளித்தனர்
உலக அளவில் 1,330 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் திருக்குறள் வாசிப்பு உலக சாதனை நிகழ்ச்சியில் ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று குறள் கூறி விளக்கம் அளித்தனர்.;
உலக அளவில் 1,330 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் திருக்குறள் வாசிப்பு உலக சாதனை நிகழ்ச்சியில் ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று குறள் கூறி விளக்கம் அளித்தனர்.
திருக்குறள் சாதனை
மனிதம்விதைப்போம் என்ற அமைப்பு 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' நிறுவனத்துடன் இணைந்து பன்மொழிகளில் திருக்குறள் வாசிப்பு சாதனை நிகழ்ச்சியை இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. 1,330 திருக்குறள்களை நினைவுகூரும் வகையில் 1,330 மணி நேரம் இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த சாதனை நிகழ்ச்சி தொடங்கியது.
தற்போது 30 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுப்பிரிவினர் திருக்குறள் கூறி விளக்கம் அளித்தனர். இதுவரை 26 மொழிகளில் திருக்குறள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 400 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடந்த நிலையில் நேற்று ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளம் வாயிலாக இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஈரோடு மாநகராட்சி பள்ளி
பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் கணினி ஆசிரியை எஸ்.கவிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். 51 மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் இந்த நிகழ்வில் ஆளுக்கொரு திருக்குறளை கூறி, அதற்கு விளக்கம் அளித்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. யுடியூப் இணையதள நேரலை மூலம் இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் நிகழ்ச்சியை கண்காணித்தது.
மனிதம் விதைப்போம் அமைப்பு நிறுவனர் ஜோதிமீனாட்சி, தன்னார்வலர்கள் உமாபாரதி, தேன்மொழி, ஷியாமளா சந்தீப் ஆகியோர் உலகம் முழுமைக்கும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உலக சாதனை நிகழ்ச்சியாக நடத்தி வருகிறார்கள். திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ள அத்தனை மொழிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்களும் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த சாதனை நிகழ்ச்சியில் ஈரோடு அரசு பள்ளிக்கூட மாணவிகள் பங்கேற்று இருப்பதும் சிறப்பானதாகும். 1,330 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.