தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேளி மீன் 1,300 கிலோ பறிமுதல்

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க தேளி மீன் 1,300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-22 18:33 GMT

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க தேளி மீன் 1,300 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆபத்தான தேளி மீன்

ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் பட்டணம்காத்தான் பகுதியில் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் முதலியவற்றில் சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த தேளி மீன் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு செல்வது தெரிந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரி லிங்கவேல், வேனில் இருந்த மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த திருமலை(வயது 65) என்பவரிடம் விசாரித்தபோது, ராமநாதபுரம் அருகே கன்னியேந்தல் கண்மாயில் ஏலம் எடுத்து மற்ற மீன்களை விற்பனை செய்துவிட்டு இந்த மீன்களை உச்சிப்புளி அருகே நாரையூரணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

அபராதம்

இந்த ஆப்பிரிக்க தேளி மீன், மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதனை அரசு தடைசெய்துள்ளது என்று எடுத்து கூறப்பட்டது. இதைதொடர்ந்து மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஆப்பிரிக்க தேளி மீன் என்பதை உறுதி செய்தனர். இதன்பின்னர் தேளி மீனை விற்பனைக்காக கொண்டு சென்ற திருமலைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தில் இருந்த 1,300 கிலோ தேளி மீனை அதிகாரிகள் ராமநாதபுரம் அருகே ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று குழிதோண்டி புதைத்து அழித்தனர்.

இதுகுறித்து உணவுபாதுகாப்பு அதிகாரி லிங்கவேல் கூறியதாவது:-

இந்த ஆப்பிரிக்க தேளி மீன் அசைவ இனத்தை சேர்ந்தது. இந்த மீன் ஆடு, மாடு, நாய், கோழி கறிகளை தான் உண்ணும். இதை தவிர குளங்களில் உள்ள நாட்டு மீன்களை முழுமையாக தின்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளும். தண்ணீர் தேவையே இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் 2 நாட்கள் வரை உயிர்வாழ கூடியது. 15 கிலோ எடை வரை வளரக்கூடியது. அதிக கொழுப்பு சத்து கொண்ட இந்த மீன் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது.

நோய்

புற்றுநோய், குழந்தையின்மை, மாரடைப்பு போன்ற கொடிய பாதிப்புகளை தரக்கூடியது. குறிப்பாக குழந்தையின்மை பிரச்சினை அதிகம் வரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த மீன் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன்களை கோழி தீவனமாக வாங்கி வந்தாலும் பதப்படுத்தாமல் கொண்டு செல்வதால் இதனை வாங்க உள்ள நபர் மதுரைக்கு கொண்டு சென்று அறுத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்