8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 8 கோவில்களில் இருந்த 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-02-20 14:07 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 8 கோவில்களில் இருந்த 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். தங்க முதலீட்டு பத்திரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கமிஷனர் அலுவலகத்தில், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் துரைசாமி ராஜூ, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர். மாலா ஆகியோர் முன்னிலையில் 8 கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் ரவிரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்தது.

இதனால் பல கோவில்களில் நகைகள் (பலமாற்று பொன்னினங்கள்) பயன்படுத்த இயலாமல் கிடந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி, பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவில்களின் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கியதில் 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைத்தது. இதனை வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கிறது. இத்தொகை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்கு செலவிடப்பட்டு வருகிறது.

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில், நைனார்கோவில், நாகநாதசாமி கோவில், சேலம் சுகவனேசுவரர் சாமி கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் என 8 கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள நகைகள் இன்று பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன்மூலம் சுமார் ரூ.1.5 கோடி வட்டித்தொகையாக கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் மடப்புரம், தேக்கம்பட்டி மற்றும் குணசீலம் ஆகிய 3 கோவில்களில் 46 கிலோ 237 கிராம் எடையுள்ள நகைகள் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. அவை விரைவில் மும்பை உருக்காலைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.25 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரியபாளையம் கோவிலில் தற்போது சேர்ந்திருக்கின்ற 13 கிலோ எடை உள்ள நகைகளை உருக்கி தங்கத்தேர் செய்வதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்