மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ேவலூர் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Update: 2022-12-30 17:25 GMT

1,200 போலீசார்

ஆங்கில புத்தாண்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதலாக ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடைகளிலும், சாதாரண உடைகளிலும் பணியில் நியமிக்கப்படுவார்கள். இதற்காக வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.

கேக் வெட்டக்கூடாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் "கேக்" வெட்டுதல், பட்டாசு வெடித்தல், ஒலிபெருக்கிகள் வைத்தல் கூடாது. மேலும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதனை உறுதி செய்யவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மொத்தம் 60 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 24 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். கேளிக்கை விடுதிகளில் இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமீறல்கள் இன்றி நடத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகள், காவல் சோதனைச் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

நன்னடத்தை சான்றிதழ்

அதிவேகமாக மோட்டார் பந்தயத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற அத்துமீறல்களை தவிர்க்க மாவட்டத்தில் 58 இடங்களில் சாலை தடுப்புகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் வாகன எண்கள் அடையாளம் காணப்பட்டு மோட்டார் சைக்கிள் பந்தயம் போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், மேலும் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேலைவாய்ப்பு பெற காவல்துறை மூலமாக நன்னடத்தைச் சான்றிதழ் பெற பரிந்துரை செய்யப்படாது.

காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடித்து அசம்பாவிதம் இல்லாத மற்றும் விபத்து இல்லாத புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்