ராயபுரம் மண்டலத்தில் தொழில் வரி செலுத்தாத 120 கடைகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ராயபுரம் மண்டலத்தில் தொழில் வரி மற்றும் சொத்து வரி செலுத்தாத 120 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் தொழில் உரிமம் பெறாமலும், தொழில்வரி செலுத்தாமல் இயங்கி வருகின்றன. இதனை கண்டறிந்து அந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தும்படியும், அதையும் மீறி செலுத்தாத கடைகளை மூடி 'சீல்' வைக்கும்படியும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அதன்பேரில் முதல் கட்டமாக ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் நிதிபதி மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் நக்கீரன், ரமேஷ், பத்மநாபன் ஆகியோர் தலைமையில் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்க சாலை தெரு, அண்ணா சாலை ரிச்சி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகும் தொழில் வரி செலுத்தாமல் செயல்பட்டு வந்த சுமார் 120 கடைகளுக்கு நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று 'சீல்' வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
அதன்படி கடையை திறப்பதற்கு முன்பாகவே அதில் இருந்த பூட்டுக்கு மேல் பூட்டு போட்டு அதில் 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் மாநகராட்சிக்கு உடனடியாக தொழில் வரி மற்றும் சொத்து வரி செலுத்தும்படியும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மேலும் இதுபோல் தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் கடைக்காரர்களை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.