மேட்டூர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்,
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனகல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
16 கண் மதகுகள்
இதன் அடிப்படையில் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 97 ஆயிரம் கனஅடி வீதமும், அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்தநிலையில் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அறிந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மேட்டூருக்கு வந்து, அதன் அழகை கண்டு ரசித்து செல்கிறார்கள். இதனால் மீண்டும் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதுப்பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் காவிரி இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
பவானியில் ஏராளமான குடியிருப்புகள் காவிரி கரையை ஒட்டியுள்ளது. அதனால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.