போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-10-17 20:24 GMT

துவாக்குடி:

துவாக்குடி மற்றும் நவல்பட்டு, திருவெறும்பூர் பகுதியில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு குறைபாடு மற்றும் சாலை விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட 12 வாகனங்களை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு குறைபாட்டுடன் இயங்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கத்திக்குத்து

*உப்பிலியபுரத்தை அடுத்துள்ள இ.பாதர்பேட்டை நகர் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 49). டீ மாஸ்டரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மலருடன் இருசக்கர வாகனத்தில் உப்பிலியபுரம் சென்றுவிட்டு, திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி மலர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவியரசன் ஆகியோர் காயமடைந்தனர்.

*திருச்சி கருமண்டபம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அன்பழகனை முன்விரோதம் காரணமாக குமரன், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கத்தியால் குத்தினார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

*கைகாட்டியை அடுத்த பிராம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாம்பட்டியில் பூலாங்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மருங்காபுரி தாசில்தார் செல்வசுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவனேசன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று காலை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையிலும் அங்கு நெல் நடவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வருவாய் துறையினர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை அளந்து கொடுத்தனர். ஆனால் இன்னும் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படவில்லை.

ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

*கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான ரவுடி ஜாக்கிஜான் என்ற வெள்ளை ஜாக்கியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

*திருச்சி உறையூர் தியாகராஜர்நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிய காட்டூர் நேருநகரை சேர்ந்த பவித்ரன் (24), மேலப்புதூரை சேர்ந்த அப்துல்காதர் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நகராட்சி-வங்கி ஊழியர் பலி

*திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகரனின் மகன் லோகேஸ்வரன்(வயது 32). இவர் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ஆங்கரையில் இருந்து வீட்டிற்கு சென்றபோது மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

*மணப்பாறை அருகே பாத்திமா மலை ஊரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை அலுவலக வேலையாக ஒரு ஸ்கூட்டரில் தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். பின்னர் அதே ஸ்கூட்டரில் நேற்று மாலை மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை-கீரனூர் சாலையில் ஆம்பூர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பாசர்சலால் (27) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்